தண்ணீரின் நான்கு முக்கிய பணிகள்

தண்ணீரானது உடலில் நான்கு விதமான முக்கிய வேலைகளைச் செய்கிறது. அவற்றைத் தெரிந்து கொண்டு, ஒவ்வொரு மனிதனும் செயல்பட்டால் நோயற்ற வாழ்வு வாழலாம்.

தண்ணீரின் நான்கு முக்கியப் பணிகள்:

1. தண்ணீரானது உடலில் இருந்து ஜீவ சத்துக்களைக் கரைத்து திரவ ரூபமாக சரீரத்திலுள்ள ஜீவ அணுக்களுக்கு (செல்) எடுத்துச் செல்லும் மிக முக்கியப் பணியைச் செய்கிறது.

2. தண்ணீரானது உடலினுள் உற்பத்தியாகும் ரசாயனப் பொருள்களுடன் சேர்ந்து கரைந்து சரீரம் முழுவதும் பரவுவதற்கு அத்தியாவசியமானதாகிறது.

3. தண்ணீரானது உடலின் சீதோஷ்ண நிலையை ஒரே சீராக அதிக சூடாகாமலும், அதிக குளிர்ச்சியாகாமலும் கட்டுப்படுத்தி சம சீதோஷ்ண நிலையை சரீரத்தில் பராமரித்து வருகிறது.

4. அத்துடன் நுரையீரல் வழியாகவும் சருமங்கள் வழியாகவும் அழுக்குகளை வேர்வை மூலமாகவும் சளி மூலமாகவும் வெளியேற்றுகிறது. சிறுநீர் மூலம் அழுக்குகளை எடுத்துச் செல்லவும் உதவுகிறது.

தண்ணீரின் முக்கியத்துவம்

தண்ணீரானது உயிராதாரத்துக்கு அஸ்திவாரமாகவும் தேவையில்லாத கழிவுகளை உடலிலிருந்து அகற்றவும் மிகவும் அத்தியாவசியமானதாக இருக்கிறது.

தண்ணீர் தேவைப்படாத ஜீவராசிகளே உலகில் இல்லை என்று கூடச் சொல்லாம்.

ஒரு கட்டடம் கட்ட வேண்டுமானால், நாம் முதலில் அந்த இடத்தில் வளர்ந்துள்ள தேவையில்லாத செடி கொடிகளை அகற்றியும், தரையை சமன்படுத்தியும் கற்கள் அமைப்புக்குத் தகுந்தவாறு கல்-மண்-சிமெண்ட் இவற்றைக் கொண்டு உறுதியாக அஸ்திவாரம் போடுகிறோம்.

அப்போதுதான் அதன் மேலே கட்டப்படும் கட்டடம் உறுதியாக காற்று – மழை, போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்த்து வலுவாக நிற்கும்.

ஆனால், மனிதன் தனது உடல் சுகாதரத்தை நன்றாக வைத்துக் கொள்வதற்குத் தேவையான அஸ்திவாரத்தை சரியானபடி போடுவதில்லை. அதனால் மருந்துகளையும், மாத்திரைகளையும், டானிக்குகளையும் நம்பி வாழ்கிறான்.

தனது சரிரத்தில் இருக்கும் குப்பைகளையும், கழிவுகளையும் அகற்றுவதற்கான எந்த முயற்சியையும் முன்கூட்டியே செய்வதும் இல்லை.

பரிதாபகரமாக, மனிதன் தான் சாப்பிடும் உணவுப் பொருள்களின் கழிவுகளையும் மற்றும் சரீரத்தில் உற்பத்தியாகும் மற்ற கழிவுகளையும் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலையில்லாமல் மிகவும் ருசியான உணவு வகைகளையும் பான வகைகளையும் சாப்பிடுவதன் மூலம் அவற்றையும் தனது வயிறாகிய குப்பைத் தொட்டியில்தான் கொட்டிக் கொண்டிருக்கிறான்.

சாப்பிட்ட உணவுப் பொருள்கள் சில நிமிடங்களிலேயே உள்ளே செயல்பட ஆரம்பித்து அழுக ஆரம்பித்து 24மணி நேரத்தில் நாற்றமெடுக்கும் கழிவாக மாறி விடுகிறது.

இத்தகைய ஜீரணமாகாத உணவுப் பொருள்களாலும் மற்ற திரவங்களாலும் நிரம்பியிருக்கும் வயிற்றில் மேலும் மேலும் உணவுகளைத் திணித்துக் கொண்டிருக்கிறோம்.

சாப்பிட்ட உணவு சரியாக செரிமானமாகி அதன் கழிவுகள் முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டதா என்பதை கவனிக்க நேரமில்லாமல் மனிதன் செயல்படுகிறான்.

அதனால் இத்தகைய குப்பைகள் உடலில் அதிகம் சேரச் சேர, பலவிதாமான நோய்களுக்கு ஆளாகிறான்.

சத்தான உணவுகள், வாய்க்கு ருசியான உணவுகள் என்று சாப்பிட்டுவிடுவதால் மட்டும் தேகம் ஆரோக்கியமாகி விடாது.

அதன் கழிவுகளும் உடம்பில் இருந்து வெளியேறினால்தான் மனிதன் சௌகரியமாக நோயின்றி வாழலாம்.

இது தினசரி நடக்கும் முக்கிய பணியாகும். மனிதன் வாழ்வதற்கு தினசரி ஆகாரம் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும்.

ஏழை – பணக்காரன் என்ற வித்தியாசமில்லாமல் பசிக்குச் சாப்பிட்டுத்தான் வாழ வேண்டியிருக்கிறது.

முக்கியமாக சாப்பிட்ட உணவுகள் நல்லபடியாக செரிமானம் ஆவதற்கு தண்ணீர் அவசியம் வேதவைப்படுகிறது.

செரிமானமாவதற்கு மட்டுமல்லாமல், சரீரத்தில் இரத்த ஓட்டம் தங்கு தடையின்றி நடைபெறுவதற்கும், பிராண சக்திகள் தண்ணீரில் இருந்து சரீரத்துக்குக் கிடைக்கவும் தண்ணீர் மிக அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது.

அத்துடன் இல்லாமல் சரீரத்தில் உற்பத்தியாகும் கழிவுகளை, மலம் – மூத்திரம் – வியர்வை – சளி போன்றவற்றை வெளியேற்றவும், உடம்பை சுகாதாரமாக வைக்கவும் தண்ணீர் மிகவும் அவசியமாகிறது.

— தொடரும் —

இந்த புத்தகத்தை எழுதியவர் :
மதிப்பிற்குரிய நட. பரணீதரன் (இயற்கை வைத்தியர் மற்றும் யோகா பயிற்சியாளர்) அவர்கள் ஆவர்.

இந்த புத்தகம் பிரதி வேண்டும் என்று நினைபவர்கள்.
நர்மதா பதிப்பகம், சென்னை – 600 017 – ல் வாங்கிக்கொள்ளலாம். அல்லது உங்கள் அருகில் உள்ள புத்தக கடைகளில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.

© 2020 Spirituality