இட்லியின் பயன்கள்

நீங்கள் தென்னிந்தியாவில் உள்ள எந்த உணவகத்திற்கும் போனாலும், மெனுவில் இட்லி முதலிடத்தில் உள்ளது. டிஃபினை ‘அற்புதமான இட்லி’ என்று தொடங்கும் எங்கள் ஊர்க்காரர்களின் பழக்கம் அவ்வளவு எளிதில் மாற்றப்படவில்லை.

நாற்பது வயதைத் தாண்டியவர்கள், தங்களின் இளம் பிராயத்தில் அம்மாவின் கையால் பதினைந்து, இருபது இட்லிகளை அள்ளிப் போட்டுக்கொண்டதாகச் சொல்லும் கதைகளைக் கேட்டுக் கேட்டு வெறுத்துப் போகும் இன்றைய தலைமுறையினரும் உண்டு. இட்லியின் வயது 700 ஆண்டுகள்.

ஆம்… இட்லி தென்னிந்தியாவில் காலை உணவின் ராஜாவாக 700 ஆண்டுகளாய் இருந்து வருகிறது.

அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதா என அனைத்து மருத்துவர்களும் பரிந்துரைக்கும் உணவாகவும் இட்லி இருக்கிறது.

ஒரு வயது குழந்தை முதல் 100 வயது முதியவர் வரை, அனைவரும் சாப்பிடக்கூடிய உண.வாக இருக்கிறது.

எல்லாருக்குமான உணவாகவும், எல்லா காலத்திலும் சாப்பிடக்கூடிய உணவாகவும், இந்தியாவின் தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ற உணவாகவும் இருக்கிறது.

ஒரு இட்லியில் 60 முதல் 70 கிலோ கலோரிகள் வரை அடங்கி இருக்கிறது.

2 கிராம் புரதம், 8 கிராம் கார்போ ஹைட்ரேட், 2 கிராம் நார்ச்சத்து ஒரு மில்லி கிராம் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ ஆகியவை உள்ளது.

தினமும் 4 இட்லிகள் எடுத்துக்கொண்டால் 300 முதல் 350 கலோரி கள் உடலுக்கு கிடைக்கும். இட்லியோடு சட்னி சாம்பார் சேரும்போது எல்லா ஊட்டச்சத்தும் சரிவிகிதத்தில் கிடைக்கும்.

இட்லி நம் உடலில் ரத்தத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருகிறது, தசைகளுக்கு பலம் அளிக்கிறது. மூளையில் உள்ள செல்களுக்கு சுறுசுறுப்பையும் அளிக்கிறது. உடலில் எந்த பாதிப்பும் இல்லாமல் செரிக்கக்கூடிய உணவாகவும் பயண நேரங்களில் உண்பதற்கு ஏற்ற உணவாகவும் இருக்கிறது.

இட்லியோடு சாம்பார் சட்னி மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது. அசைவம், கார குழம்பு என்று எடுத்துக்கொள்வது தவறு. மேலும், இட்லியோடு வடை, போண்டா எடுத்துக்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.

வாயுக்கோளாறு உள்ளவர்கள் தினமும் இட்லி சாப்பிடுவது நல்லது. வயிற்று புண்கள் ஆறுவதோடு செரிமான உறுப்புகள் சீராக இயங்கவும் இட்லி உதவுகிறது.

இட்லி இரண்டு மணி நேரத்துக்குள் செரிக்க கூடிய உணவாகும். குழந்தைகளுக்கு தினமும் இட்லி ஊட்டுவது நல்லது. அவர்கள் விரும்பும் வகையில் ரவை, ராகி, வெஜிடபிள், கேரட் துருவல், பீட்ரூட் துருவல் போன்றவை கலந்து குழந்தைகள் விரும்பும் வண்ணம் இட்லியைக் கொடுக்கலாம்.

இட்லியை காலைப் பொழுதில் எடுத்துக்கொள்வது சிறந்தது. புரதச்சத்து ஒவ்வாமை உள்ளவர்கள் இட்லியில் அரிசிக்கு பதிலாக ஜவ்வரிசி சேர்த்துக் கொள்ளலாம்.

நீரிழிவு சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் இட்லியை குறைவாக எடுத்துக் கொள்ளலாம். மேலும், மருத்துவர் ஆலோசனைப்படி உட்கொள்வதும் சிறந்தது.

இட்லி நீராவியில் வேக வைக்கும் உணவு என்பதால் கொழுப்புச்சத்து இல்லாத உணவாக இருக்கிறது.

இட்லி மாவை 12 மணிநேரம் ஊற வைப்பதால் இயற்கையாகவே கூடுதலான உயிர்சத்துக்கள் உருவாகின்றன.

இட்லி மாவு 12 மணி நேரம் புளித்த பிறகு பயன்படுத்த வேண்டும். அதிகம் புளிக்கும்படியும் பயன்படுத்தக்கூடாது.

பழைய மாவில் இட்லி சுடக்கூடாது. இட்லியுடன் சோடா உப்பு போடக்கூடாது. குளிர்சாதனப் பெட்டியில் வைத்த இட்லியை சாப்பிடுவது சிறந்த உணவுப் பழக்கம் கிடையாது. ஆகவே இட்லி விரும்பி சாப்பிட விரும்புபவர்கள் தினமும் இட்லி மாவு அரைத்து அதனை உண்ண வேண்டும். அனைவரும் சாப்பிடக் கூடிய அற்புதமான உணவு இட்லியாகும்.

இட்லியை வீட்டில் தயார்செய்து சாப்பிடுவதே சிறந்தது. இட்லி மென்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஓட்டல்களில் பேக்கிங் சோடா பயன்படுத்துகிறார்கள் அது இட்லியின் பயனைக் கெடுப்பதோடு உடலுக்கும் நோய்களைத் தருகிறது.

இட்லி மென்மையாக இருக்க பேக்கிங் சோடாவுக்குப் பதிலாக நார்சத்து நிறைந்த வெந்தயம் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்துக்கும் நல்லது.

இட்லியில் நன்மை பயக்கக்கூடிய பாக்டீரியாக்கள் நிறைந்திருப்பதால் 12 மணிநேரம் கெட்டுபோகாமல் இருக்கும். இட்லியை பிரிட்ஜில் வைக்க கூடிய அவசியமும் இருக்காது. மொத்தத்தில் உடல் ஆரோக்கியத்துக்கும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கும் அடித்தளமாக இட்லி இருக்கிறது.

Leave a Reply

© 2020 Spirituality